Thursday 25 February 2016

இயக்குனர் பாலா - இறுதி சுற்று திரைபடத்தை பற்றி


"மற்ற படங்களைப் பார்க்கும் போது எனக்கு அழுகை வரவில்லை. இப்படத்தைப் பார்த்த போது பல இடங்களில் அழுதிருக்கிறேன். அப்படி ஒரு துல்லியமான உணர்ச்சிகள், திரைக்கதை, எடிட்டிங், நடிகர்களின் நடிப்பு, இசை, எல்லாத்துலயுமே அருமையாக இருந்தது. படமாக எடுக்கும் போது ஏதாவது ஒரு குறை என் கண்ணில் தட்டுப்படும். என் படங்களில் நிறைய குறைகள் தெரியும், இப்படத்தில் குறைகளே என் கண்ணில் படவில்லை. அற்புதமான படம், அதில் சந்தேகமே இல்லை.
இந்த மாதிரியான படங்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும் என்றால் படம் முடிந்து ரோலிங் டைட்டில் முடிவடையும் வரை இருந்து கறுப்பு ஸ்கிரீன் வரும் வரை நின்று மரியாதை செலுத்த வேண்டிய படம் இது.
ரித்திகாவின் நடிப்பு முழுவதுமே சுதாவின் நடவடிக்கைகள் தான். சுதாவின் சுறுசுறுப்பு, துறுதுறுவென இருப்பதை எல்லாம் அந்த பெண்ணுக்கு திணித்து நடிக்க வைத்திருக்கிறாள். மாதவனின் சிறந்த நடிப்பு என்றால் இந்த படம் தான். இடைவேளை காட்சியில் மாதவன் நடித்துவரும் போது எனக்கு எழுந்து நின்று கைதட்ட வேண்டும் என தோன்றியது. நல்ல படமாக இருக்கும் என நம்பித்தான் வந்தேன், ஆனால் இவ்வளவு நல்ல படமா என்று மலைத்துப் போய்விட்டேன்.
200, 300 படங்கள் பண்ணிய இசையமைப்பாளர் பண்ணிய பின்னணி இசை போல இருந்தது. நிறைய இடங்களில் வசனம் இல்லை, பின்னணி இசையை சரியாக அமைத்து கொடுத்த சந்தோஷ் நாராயணுக்கு தலை வணங்க வேண்டும்.
நமக்கு ஒரு மொழி கவர்ச்சியும், இனக் கவர்ச்சியுமே உண்டு. 'மில்லியன் டாலர் பேபி' படத்தை விட எனக்கு 'இறுதிச்சுற்று' படம் தான் சிறந்த படமாக தோன்றுகிறது. இயக்குநர் மணி சாருக்கு பெருமை சேர்த்துவிட்டார் இயக்குநர் சுதா. என்னுடன் ஒரு படத்தில் தான் பணியாற்றி இருக்கிறார். இப்படம் பார்க்கும் போது, 5, 6 விஷயங்கள் அந்த பெண்ணிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.
பெண் இயக்குநர் என்ற வார்த்தையை உபயோகப்பதே ஒரு பாவம். இயக்குநர்களில் ஆண், பெண் என என்ன இருக்கிறது. 'இறுதிச்சுற்று' படத்தின் ஒட்டுமொத்த குழுவுக்குமே இது தான் ஆரம்பச்சுற்று. அடுத்ததாக என்ன பண்ணப் போகிறார்கள் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது"


நன்றி - ஹிந்து தமிழ்


No comments:

Post a Comment