Thursday 4 December 2014

மணி ரத்னம் - தமிழ் சினிமாவின் உலக ஆளுமை

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய அளவில், பல மொழிகளில் தன் படைப்புகள் மூலம், ஒரு புதிய சினிமா இலக்கணத்தை உருவாக்கியவர் மணி ரத்னம். அவரை ஓர் உலக ஆளுமை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

திரைப்படம் குறித்த பயிற்சியோ அல்லது எந்த இயக்குநரிடமும் உதவியாளராகவோ இல்லாமல், தான் பார்த்து ரசித்த திரைப்படங்களின் பாதிப்பில், ஒரு புது மாதிரியான சினிமாவை உருவாக்கும் எண்ணத்தில், தொடங்கியதுதான் அவரது சினிமா பயணம். பல்லவி அனு பல்லவி (1983) என்ற தனது முதல் படத்தை அவருக்குப் பரிச்சயம் இல்லாத கன்னட மொழியில் எடுத்தார். பாலு மகேந்திரா என்ற ஒளிப்பதிவு மேதையும் அனில் கபூர் என்ற பிரபல இந்திப் பட நாயகனும் அதில் பங்கேற்றதற்குக் காரணம், மணி ரத்னத்தின் திரைக்கதை. முதல் படத்தின் திரைக்கதைக்குக் கர்நாடக அரசின் சிறந்த திரைக்கதை விருதையும் பெற்றார்.


அடுத்து மலையாளத்தில் உணரு (1984) என்ற திரைப்படத்தை, மலையாள எழுத்து உலகின் ஜாம்பவான் தி.தாமோதரனுடன் இணைந்து எடுத்தார். நடிப்பு மோகன்லால். முதல் இரண்டு படங்களைப் பிற மொழிகளில் எடுத்தபின், 1985-ல் தமிழில் கால் பதித்த மணி ரத்னம், கோவை தம்பியுடன் இணைந்து இதயக் கோவில் (1985) என்ற படத்தை எடுத்தாலும், அவரின் முழுமையான ஆளுமை அதே வருடம் வெளிவந்த சத்யஜோதியின் பகல் நிலவு (1985) படத்தில் வெளிப்பட்டது. இந்தப் படம் அவரை ஒரு முக்கியமான இயக்குநராகத் தமிழ் சினிமாவில் அடையாளம் காட்டியது.


அடுத்த படைப்பான மௌன ராகம் (1986), தமிழ் சினிமாவில் மென்மையான காதல் உணர்வுகளை வலுவாக வெளிப்படுத்தும் ஒரு டிரென்ட் செட்டிங் படமாக அமைந்தது.


நாயகனை உருவாக்கிய நாயகன்


1987-ல், கமல் ஹாசனுடன் இணைந்த அவரின் நாயகன், பல சாதனைகளைப் புரிந்து, அவரை உலக அளவில் ஒரு சிறந்த இயக்குநராக மேம்படுத்தியது. டைம்ஸ் பத்திரிகை அறிவித்த உலகின் 100 முக்கியப் படங்களில் ஒன்றாக இப்படம் இருப்பதே அதற்குச் சான்று. அக்னி நட்சத்திரம் (1988), அவரை வெகுஜன இயக்குநராக அடையாளம் காட்டி மாபெரும் வெற்றி கண்டது. இன்றைக்கும், இளைஞர்களுக்குப் பிடித்த படமாக அது இருந்து வருகிறது. 1989-ல் தெலுங்கில், நாகார்ஜுனா நடிப்பில் வெளிவந்த கீதாஞ்சலி, ஒரு காதல் காவியம். பல விருதுகளுடன், இன்றும் மக்களால் போற்றப்படும் ஒரு படம். குழந்தைகளின் வாழ்வைச் சித்திரித்து 1990-ல் அவர் எடுத்த அஞ்சலி, இன்றும் நம்மை நெகிழ வைக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டியுடன் இணைந்த தளபதி (1991), வெகுஜன ரசனையையும் இலக்கியத்தையும் (மகாபாரதம்) இணைத்த ஓர் அரிய முயற்சி.


உலக இயக்குநர்


1992-ல், ஏ.ஆர். ரஹ்மானை இந்திய சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ரோஜா, அவரை உலக சினிமாவின் ஒரு முக்கிய இயக்குநராக அடையாளம் கட்டியது. தீவிரவாதிகளைப் பற்றியும், தீவிரவாதம் பற்றியும், புது விதமான இசையுடன், சொன்ன படம் அதுவரை வந்ததில்லை.


திருடா திருடா 1993-ல் வெளிவந்து, பாடல்களுக்காகப் பேசப்பட்டாலும், ரசிகர்கள் அவரிடம் மேலும் எதிர்பார்த்தார்கள். அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் விதமாய் பம்பாய் 1995-ல் வெளிவந்து பெரும் சாதனை புரிந்தது. ஒரு சமகால நிகழ்வை (பாம்‌பாய் மதக் கலவரங்கள்) பொறுப்புடனும், அதே சமயம் அழுத்தமாகவும் சொன்ன அந்தப் படம் பல விருதுகளையும் அவருக்குப் பெற்று தந்தது. பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெற்றி கண்டது.


துணிச்சல் கலைஞன்


1997-ல் அவர் எடுத்த துணிச்சலான முயற்சி, சமகால வரலாற்று ஆளுமைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இருவர். இந்தப் படம் வணிக வெற்றி பெறாவிட்டாலும், அவரைச் சிறந்த இயக்குநர்களின் பட்டியலில் பல படிகள் ஏற்றியது. தில் சே (1998) நேரடி இந்திப் படமாக வந்து பல பாராட்டுகளைப் பெற்றது.


அலைபாயுதே (2000), நவீன இளைஞர்களின் உலகிற்கு மணி ரத்னம் தந்த ஒரு டிரென்ட் செட்டிங் படம். இளைஞர்களின் இந்தக் காலக் காதலைப் புதுமையாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் கொடுத்துக் காதலுக்கு மரியாதை செலுத்திய படம்.


2002-ல் வந்த கன்னத்தில் முத்தமிட்டால், ஒரு குழந்தையை மையப்படுத்தி இருந்தாலும், அவர் சொன்ன கருத்து, உலக அளவில் ஒலித்தது. ஒரு இலங்கை அகதியின், குழந்தையின் ஏக்கத்தை அவர் சொன்ன விதம் மனதைத் தொட்டது. 2004-ல் அவர் இயக்கிய நேரடி இந்திப் படம் யுவா, பல சாதனைகளைப் புரிந்து, அபிஷேக் பச்சனுக்கு இந்தி சினிமாவில் ஒரு இடத்தை ஏற்படுத்தித் தந்தது. அவர்களின் கூட்டணி 2007-ல் குரு என்ற படத்தில் தொடர்ந்து வெற்றி கண்டது. 2010-ல், அவர்கள் இருவரின் கூட்டணியில் வந்த ராவண் பெரிய சாதனை செய்யாவிட்டாலும், பேசப்படும் படமாக அமைந்தது. தமிழில், யுவா இந்திப் படத்தின் தமிழாக்கம் ஆயுத எழுத்து (2004), விக்ரமுடன் இணைந்த ராவணன் (2010) மற்றும் அவரின் சமீபத்திய கடல் (2013), ஆகியவை பெரும் வணிக வெற்றியைப் பெறாவிட்டாலும், முக்கியத்துவம் வாய்ந்த படங்களாகவே கருதப்படுகின்றன.


மணி ரத்னத்தின் சாதனைகள்


சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி வரும் மணி ரத்னத்தின் சாதனைகளாக இவற்றைக் குறிப்பிடலாம்:


தரமான சினிமாவுக்குப் பக்கம் பக்கமாக வசனங்கள் தேவையில்லை, குறைந்த வசனங்கள் கொண்ட வலுவான காட்சிகள் மற்றும் அழுத்தமான நடிப்பு மூலமும் அதே உணர்வைக் கொண்டுவர முடியும் என்று நிரூபித்தவர். இதிகாசங்களைத் தழுவி எழுதப்பட்ட சமகாலக் கதைகளை வெகுஜன சினிமாவாக்க முடியும் என்று காண்பித்த வகையில் மணி ரத்னம் ஒரு முன்னோடி.


1990 வரை ஒரு சில உலகச் சினிமா விழாக்களில் மட்டுமே தமிழ்ப் படங்கள் கலந்துகொண்டுவந்த நிலைமையை மாற்றிப் பல உலக சினிமா விழாக்களுக்குத் தன் படங்களைக் கொண்டுசென்று, அவ்விழாக்களுக்குத் தமிழ் சினிமாவை அறிமுகப்படுத்தி, தமிழ் சினிமாவுக்கும் அவ்விழாக்களை அறிமுகப்படுத்தியவர் மணி ரத்னம். இன்று பத்துக்கும் மேற்பட்ட உலகப் பட விழாக்கள் தமிழ் சினிமாவை வரவேற்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியவர் அவர்.


தமிழ் சினிமாவில் பாடல் காட்சிகள் தேவை இல்லாத திணிப்பு என்ற எண்ணம் பரவலாக இருந்த காலத்தில், பாடல் காட்சிகளில் நவீனத்தையும், அழகையும், எளிமையும் புகுத்தி, அவர் படங்களின் பாடல் காட்சிகளுக்காகவே இன்னொருமுறை படங்களைப் பார்க்க வைத்தவர் மணி ரத்னம்.


அதே போல், மணி ரத்னம் படங்களின் சண்டைக் காட்சிகள் வலுவானவை. அவற்றில் உள்ள யதார்த்தத் தன்மையும் நவீனத் தன்மையும் பல இயக்குநர்களுக்கு ஒரு முன்னுதாரணம். பகல் நிலவு தொடங்கி, நாயகன், தளபதி, ராவணன் எனப் பல படங்களில் சண்டைக் காட்சிகளில் அவர் கொண்டுவந்த மிகையற்ற அழுத்தம் எப்போதும் பேசப்படும் ஒன்றாகவே இருக்கிறது.


மணி ரத்னத்தின் பகல் நிலவு தேவராஜன் (சத்யராஜ்) தொடங்கி, அக்னி நட்சத்திரம் சிதம்பரம் (ஜீ. உமாபதி), தளபதியின் கலிவரதன் (அம்ரிஷ் பூரி), ஆயுத எழுத்தின் செல்வநாயகம் (பாரதிராஜா) எனப் பலரும் மிகைப்படுத்தப்படாத வில்லன்கள்தான். நாம் சாதாரணமாகக் காணும் நபர்களைப்போலவே இருக்கும் அவர்களின் செயல்கள் மட்டுமே வில்லத்தனமாகக் காண்பிக்கப்படும். இதன் மூலம் வில்லன் பாத்திரங்களுக்கு நம்பகத் தன்மையைக் கொண்டுவந்தவர்.


தமிழ் சினிமாவை உலகமெங்கும் பாராட்ட, உலகத் தரத்தில் படைப்புகளைத் தந்து உலகெங்கிலும் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியவர் மணி ரத்னம்.. தோல்வி என்றாலும் வெற்றி என்றாலும் ஒரு புன்னகை மட்டுமே உதிர்ப்பார் ..  மணி ரத்னம் பேசுவது அவரது படங்கள் மூலம் மட்டுமே, .. 

Tuesday 2 December 2014

நாகேஷ் எனும் நடிப்பு சரித்திரம்


நாகேஷ் எனும் மக்கள் கலைஞன், குண்டுராவ் என்றுஅழைக்கப்பட்ட இவர், கம்பராமாயண நாடகம் பார்த்து நடிக்கும் ஆர்வம் ெற்று சென்னை வந்தார்.


கவிஞர் வாலியுடன் தங்கிக்கொண்டு, ரயில்வேயில் வேலை பார்த்து வந்த காலத்தில் ஒரு நாடகத்தில் வயிற்று வலிக்காரனாக இவர் நடித்த நடிப்பை பார்த்து பிரமித்தார் எம்.ஜி.ஆர். ஒரு கோப்பையை பரிசாக தந்தார். ஆனால், அதையாரும் பாராட்டவில்லை. நாகேஷை போலீஸ் கூப்பிட்டு, கோப்பையை திருடி வந்தாயா என்று விசாரிப்பது தான் நடந்தது.


அப்பொழுதில் இருந்து விருதுகளை வைக்க என்று வீட்டில் எந்த இடமும் தனியாக வைத்தது இல்லை அவர். ரெஜினா எனும் கிறிஸ்துவ பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாகினி ஸ்டுடியோ ஓனரை, யாரென்று தெரியாமல் கிண்டலடித்த பொழுது இவரின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் அவர் கொடுத்த ஆயிரம் ரூபாயில் தான் தனது திருமணத்தை நடத்திக்கொண்டார் நாகேஷ்.

'சர்வர் சுந்தரம்', 'எதிர்நீச்சல்', 'நீர்க்குமிழி', 'அனுபவி ராஜா அனுபவி' என்று தொடர்ந்து ஜெயித்த நடிகர் நாகேஷ், தில்லானா மோகனாம்பாள் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லப்பட்ட 'வைத்தி' கதாபாத்திரத்தில் தோன்றி பின்னி எடுத்தார். மைலாப்பூர் குளத்தில் அமர்ந்து கொண்டு "தண்ணியெல்லாம் வத்திப்போச்சே" என்று புலம்பிக்கொண்டு இருந்த கிருஷ்ணஸ்வாமி எனும் நபரின் தாக்கத்தை

அப்படியே திரையில் கொண்டு வந்து நாகேஷ் காட்டிய விஸ்வரூபம் தான் தருமி கதாபாத்திரம். சிவாஜி அதைப் பார்த்து ரசித்து, கட்டே இல்லாமல் அது ஸ்க்ரீனில் வருமாறு பார்த்துக்கொண்டார். 'மகளிர் மட்டும்' படத்தில் நாகேஷ் அவர்களின் நடிப்பைப்பற்றி கமல் இப்படி சொன்னார் "உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் நடித்து 'இருக்கவில்லை' என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் நாகேஷ் பிணமாக நடித்திருக்கிறார்'' என்றார்.


நாகேஷ் நடிப்பைப் பார்த்து பிரமித்த வடநாட்டு நடிகர்கள் ஏராளம். இவரது 'அனுபவி ராஜா அனுபவி' படத்து கதாபாத்திரத்தை ஹிந்தியில் எடுத்து நடித்த மக்மூத் இவர் காலில் விழுந்து மரியாதை செய்தார். நாகேஷ் அவர்கள் வெறும் மவுனமான உடல்மொழியின் மூலம் காமெடி செய்யலாம் என்று சாப்ளின்,பஸ்டர் கீட்டன் ஆகியோரை பார்த்து நம்பினார். பின்னர் சத்தம் போட்டு திரையை அதிரவைத்தார்.


மதுப்பழக்கம்,ஒரு கொலை வழக்கில் உருண்ட பெயர் இவற்றைத்தாண்டி மீண்டும் திரையில் மின்னினார் நாகேஷ். அவரது நடன பாணி தனித்துவமானது. ஒரு முறை சரியாக ஆடத்தெரியவில்லை என்றொரு இயக்குனர் இவரை கடிந்து கொள்ள, கதவை மூடிக்கொண்டு பயிற்சி செய்துவிட்டு வந்தார். நடனத்தில் கலக்கி எடுத்தார். அப்படித்தான் அவரது பாணி உருவானது.


'பூவா தலையா?' படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்குவார். அப்போது இல்லாத வசனமான 'இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு' என்று டயலாக் பேசி அதிரவைத்தார். 'அபூர்வ ராகங்கள்' படத்தில் ஆக் ஷன் என்று பாலச்சந்தர் சொன்னதும் நிழலை பார்த்து சியர்ஸ் சொன்னார் மனிதர் !


"உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே... எப்படி ?" என்று கேட்ட பொழுது ,"மாவு நல்லா அரைபடணும் அப்படின்னு அம்மிக்கல்லை ஆறு மாசத்துக்கு ஒருமுறை கொத்து வைப்பாங்க. அப்படி என் முகத்தில் சின்ன வயசில் ஆண்டவன் வைத்த அம்மை தழும்பால் தான் நான் நல்லா பொளிஞ்சு இருக்கேன் !" என்றார். அது தான் நாகேஷ் !

கமலுடன் இணைந்து தொடங்கிய தனது இரண்டாவது இன்னிங்ஸில் நாகேஷ் ஜொலித்த 'மகளிர் மட்டும்' திரைப்படத்தின் அந்த நகைச்சுவைக் காட்சியை ரசிக்காதவர்களும், அவரது உடல்மொழியைப் பார்த்து வியக்காதவர்களும் இருக்கவே முடியாது. நடமாடும் பிணமாக, நின்றபடி உடலை விறைத்துக்கொண்டு , உடலில் உயிர் இருப்பதையே மறைத்து நடிக்க நாகேஷ் ஒருவரால்தான் முடியும்

இந்தியாவின் ஜெர்ரி லூயி என்று புகழ்பெறும் வகையில், இணையற்ற நகைச்சுவைக் கலைஞராக மிளிர்ந்த நாகேஷ், உலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர்கள் போலவே அவரது வாழ்க்கையும் துயரங்களும் ஏமாற்றங்களும் நிறைந்ததுதான். தனது வாழ்வின் சோகங்களையும் நகைச்சுவையாக மாற்றத் தெரிந்த கலைஞர் அவர்..'நம்மவர்' படத்துக்காக பெற்ற சிறந்த துணை நடிகர் விருதைத் தவிர எந்த மத்திய அரசின் விருதும் இந்த மகத்தான கலைஞரை தேடிவரவில்லை.

Monday 1 December 2014

பிசாசு அதிர வைக்கும் மிஷ்கின்

மிஷ்கினை எப்போது தேடிச் சென்றாலும் அவரது அறையின் புத்தகக் குவியலுக்கு மத்தியிலிருந்து முகம் காட்டி வரவேற்பார். பேச ஆரம்பித்துவிட்டாலோ அவர் உயிருள்ள ஒரு புத்தகம்... தற்போது அவர் இயக்கிவரும் 'பிசாசு'படத்தின் இறுதிக் கட்ட வேலைகளை முடிந்திருந்த நிலையில் அவரைச் சந்தித்தபோது 'பேசிக் ரிலேட்டிவிட்டி ஃபிசிக்ஸ்' புத்தகத்தை அருகில் கவிழ்த்து வைத்திருந்தார். “ சூரியனுக்குக் கீழே எதைப் பற்றியும் கேளுங்கள்” என்று பேட்டியைத் தொடங்கி வைத்தார்...

பல சமயங்களில் தரமான படங்களைப் புறக்கணிக்கும் தமிழ் ரசிகர்களை உங்களால் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறதா?


திரைப்படத்தைத் திரை அரங்கில் பார்ப்பதுதான் அற்புதமான அனுபவமாக இருக்க முடியும் என்று நம்பும் ரசிகர்களைப் பற்றி நாம் பேசுவோம். இவர்கள் படம் பார்க்க வரும்போது டிக்கெட் கவுண்டருக்குள் கையை விட்டு, “ நாலு பாட்டு, அதுல ஒண்ணு குத்துப் பாட்டு. அப்புறம் மூணு ஃபைட், ஒரு காமெடி டிராக், நல்ல அழகான ஹீரோயின் இருக்கிற படத்துக்கு ஒரு டிக்கெட் கொடுங்க” என்று கேட்பதில்லை. டிக்கெட் வாங்கும்போதே இந்தப் படத்திலயாவது புதுசா வேறொரு வாழ்க்கை இருக்காதாங்கிற ஏக்கத்தோடதான் வாங்கறாங்க. பணத்தை நீட்டும்போதே எதிர்பார்ப்பு நிறைந்த பதற்றத்தை அவங்க முகத்தில் பார்க்க முடியும். ஒரு பாட்டிகிட்ட கதை கேட்க வர்ற குழந்தையின் உந்துதலோடுதான் உள்ளே வர்றாங்க. ஆனால் அவங்களை நாம தொடர்ந்து ஏமாத்திக்கிட்டே இருக்கோம். பாலாவைப் பாருங்க, பாலாஜி சக்திவேலைப் பாருங்க. காதல் படத்தை எப்படிக் கொண்டாடினாங்க... அப்போ இந்த  ஆடியன்ஸை நீங்கள் எப்படிக் குறை சொல்ல முடியும்?


'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' ரிலீஸ் ஆகி ஓடிக்கிட்டு இருந்த நேரம், மதுரையில் என்னைப் பார்த்த ரசிகர்கள் கட்டிப்பிடிச்சுகிட்டு விடமாட்டேன்றாங்க. ஒருத்தர் என் காலைப் பிடிச்சுட்டு ஓண்ணு அழறார். முன்ன பின்னே தெரியாத என்னைப் பார்த்து “டேய் நாந்தாண்டா நீன்னு” சொல்லிக் கதறி அழறார். அது இந்த மிஷ்கினுக்குக் கிடைச்சதில்ல. அந்தப் படத்துக்கும் கதாபாத்திரங்களுக்கும் கிடைச்சது. எப்பவாச்சும்தான் நாம 'சேது 'மாதிரியும், 'சுப்ரமணியபுரம்' மாதிரியும், 'பருத்தி வீரன் 'மாதிரியும் கதை சொல்றோம்.


அப்போ சில மோசமான படங்களும் ஏன் ஓடுதுன்னு கேட்கலாம். ஏன்னா மக்களுக்கு சினிமாவைத் தவிர வேற பொழுதுபோக்கு கிடையாது. வாழ்க்கையில் அவ்வளவு மன அழுத்தம் அவங்களுக்கு. ஆயிரம் பக்க புத்தகத்தைப் படிச்சு ரசிக்க வாழ்க்கை அவங்களை அனுமதிக்கல. இதனால மோசமான படங்களை மன்னிக்கிறாங்க. அவங்க பெருந்தன்மையை இங்க நிறைய பேர் மிஸ் யூஸ் பண்ணிக்கிறதைத்தான் டாலரேட் பண்ண முடியல.


'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் நீங்கள் பங்குபெற்ற நேர்த்தியான குங்பூ சண்டைக் காட்சிகள் இருந்தன. குங்பூ மீது எப்படி இத்தனை ஈடுபாடு?


எனக்கு ஐந்து வயது. திண்டுக்கல் என்.ஜி.வி.பி. திரையங்கில் காலை பதினோரு மணி காட்சிக்கு 'எண்டர் தி டிராகன்' படத்துக்கு அழைத்துச் சென்றார் என் அப்பா. படம் முடிந்ததும் படம் எப்படிடா இருக்குன்னு கேட்டார். படம் சூப்பரா இருக்குப்பா என்று வியந்துபோய்ச் சொன்னேன். அப்படியே அடுத்த காட்சிக்கு, அதே படத்துக்கு அழைத்துப்போனார். புரூஸ் லீயை நான் ஒரு புத்தனாகவும் ஒரு ஜே. கிருஷ்ணமூர்த்தியாகவும் பார்க்கிறேன். பிறகு பத்தாம் வகுப்பு படிக்கிறபோது முறையாக ஒரு மாஸ்டரிடம் குங்பூ பயிலத் தொடங்கினேன். மொத்தம் பத்தாண்டுகள் இடைவிடாமல் தொடர்ந்தது பயிற்சி. மார்ஷியல் ஆர்ட், சண்டியர்களின் சாகசக் கலை அல்ல. அது வாழ்க்கை முறை. தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு மார்ஷியல் ஆர்ட் கதையை நிச்சயம் படமாக்குவேன்.


'ஓநாயும் ஆட்டுக்குட்டியும் 'படத்தை நீங்கள் தேசிய விருதுக்கு அனுப்பவில்லையா?


இல்லை. எனக்கு தேசிய விருதென்று இல்லை, எந்த விருதுமே வேண்டாம். எனக்குப் பெரிய விருதே தமிழ்நாட்டு மக்கள் தரும் அங்கீகாரம்தான். இங்கே படம் பார்க்க எத்தனை கோடி உறவுகள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துப் பாராட்டினாலே போதுமே. எனக்கு பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என எந்த வுட்டும் வேண்டாம். என் தமிழ், என் மக்கள் போதும். என் கலையை நான் விற்க விரும்பவில்லை.


கதைகளை காப்பியடிப்பதில் அலாதியான பிரியம் உண்டு என்று கூறியவர் நீங்கள். தற்போது இயக்கிவரும் 'பிசாசு' படத்தின் கதையை எதிலிருந்து காப்பியடித்தீர்கள்?


அந்த மரத்துக்குக் கீழே போகாதே, நடு ராத்திரியில் எங்கும் அலையாதே பிசாசு வருமென்று அப்பா, அம்மா சின்ன வயதில் பயமுறுத்தினார்கள் அல்லவா அதிலிருந்து காப்பியடித்தேன். அதே அம்மா அப்பா ஒரு கட்டத்துக்குப் பிறகு பிசாசு என்பதே பொய், கற்பிதம் என்று கற்பிக்க ஆரம்பித்தார்கள் அல்லவா அதிலிருந்தும் காப்பியடித்தேன்... அம்புலி மாமாவில் வரும் வேதாளத்திடமிருந்தும் பைபிளும் குரானும் சித்திரிக்கும் பிசாசிடருந்தும் கொஞ்சம் காப்பியடித்தேன். தம்மபதத்தில் புத்தன் சொல்லிச் சென்ற 'அம்புலிமா' என்ற கதையிலிருந்தும் கொஞ்சம் காப்பியடித்தேன். கொஞ்சம் ஷேக்ஸ்பியர், கொஞ்சம் டால்ஸ்டாய், கொஞ்சம் தாஸ்தயெவ்ஸ்கி என்று இவர்கள் சித்திரித்த பேய்களின் தாக்கமும் இந்தக் கதையில் உண்டு.


பிசாசின் கதைதான் என்ன?


சில வேளைகளில் மனிதர்களைவிட பிசாசுகள் நல்லவர்கள் என்பதுதான் கதை.


இந்தப் படத்தில் உங்களது நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிச் சொல்லுங்கள்.


பிராயாகா நாயகி. கேரளத்தி லிருந்து வந்திருக்கிறாள். படத்தின் தலைப்பை மட்டுமல்ல ஜீவனையும் தன் தோளில் சுமக்கும் பெண். நாகா நாயகனாக வருகிறான். இவனது நண்பர்களாக அஸ்வத், ராஜ் என்று இரண்டு இளைஞர்கள். எல்லோருமே புதியவர்கள். தெரிந்த ஒரே முகம் அண்ணன் ராதாரவி. அவரை இந்தப் படத்தில் நீங்கள் புதிதாகக் கண்டெடுப்பீர்கள். தனது ஆன்மாவை இதில் நடிக்க வைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று பி.சி. ராமிடம் சென்று கேட்டேன். என் மாணவன் வைட் ஆங்கிள் ரவிசங்கரன் என்னைவிடச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்வான், அவனைப் பயன்படுத்து என்றார். அவர் சொன்ன பிறகு மாற்றுக் கருத்து ஏது? ரவி காத்திருந்து தன் திறமையைக் காட்டியிருக்கிறார். அதேபோல என் அலுவலகத்துக்கு வாய்ப்புக் கேட்டு வந்தான் ஒரு இளைஞன். நான் கேட்பதற்கு முன்பே கீபோர்டில் வாசிக்க ஆரம்பித்து மயக்கினான். அவன்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஆரோள். அதேபோல இந்தப் படத்தில் பிசாசு காற்று வெளியில் செய்யும் சாகசங்களைச் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சண்டைக் கலைஞர் டோனி அமைத்திருக்கிறார்.




நன்றி


தி ஹிந்து ( தமிழ் )